கைது 
உள்ளூர் செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டரை கடித்துவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி கைது

ஆலங்குளம் அருகே பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியவரை பிடிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டரை கடித்துவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

ஆலங்குளம்:

சுரண்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் விமலா(வயது 32). இவர் நேற்று முன்தினம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் வசிக்கும் தனது தங்கை வீட்டுக்கு பொங்கல் படி கொடுக்க வந்தார்.

போலீஸ் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் சென்றார். அப்போது நெட்டூர் பஸ் நிறுத்தம் அருகே 5 பேர் விமலாவுக்கு வழிவிடாமல் நின்று தகராறு செய்தனர்.

அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் 5 பேரும் சேர்ந்து விமலாவை தாக்கினர். இதுதொடர்பாக நெட்டூரை சேர்ந்த அப்பு என்ற அப்ரானந்தம், வேல்முருகன், முருகன், கண்ணன், மாரியப்பன் ஆகிய 5 பேர் மீது ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் தலைமையிலான போலீசார் 5 பேரையும் தேடி வந்தனர். அப்போது ஓடைமறிச்சான் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வேல்முருகன் மற்றும் அப்ரானந்தத்தை போலீசார் வழிமறித்தனர்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தினேசின் கை விரலை கடித்துவிட்டு அப்ரானந்தம் தப்பி செல்ல முயன்றார். ஆனால் அதற்குள் 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மோட்டார் சைக்கிளில் இருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட அப்பு என்ற அப்ரானந்தம் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 16 வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலில் இவர் உள்ளார். வேல்முருகன் மீது 4 வழக்குகள் உள்ளன. மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தற்போது சம்பவம் நடந்த நெட்டூரில் போலீஸ் புறக்காவல் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு தினமும் போலீசார் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக அங்கு போலீசார் செல்லவில்லை.

அவ்வாறு சென்றாலும் ரவுடிகள் சிலர் அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.