சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர் காந்திமதி (வயது 36). சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் இவர் இன்று காலை தனது மகள் மற்றும் மகனுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் திடீரென தான் மறைத்து வைத்து எடுத்து வந்த மண் எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கும் பலராம் என்பவருக்கும் திருமணமாகி 21 ஆண்டுகள் ஆகிறது. எங்களது மகள் கல்லூரி முதலாம் ஆண்டும், மகன் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். எனது கணவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்துள்ளார். இதனால் நானும், எனது கணவரும் 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தோம்.
பின்னர் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்ததால் என்னையும், எனது மகனையும் எனது கணவர் மற்றும் அவரது கள்ளக்காதலி உள்பட சிலர் தாக்கினர்.
இந்த நிலையில் எனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 5½ பவுன் நகை, படிப்பிற்காக வைத்திருந்த 2 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை திருடி சென்று அந்த பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். எனவே எனது பணம், நகையை மீட்டு தருவதுடன் அவர்களிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சோபியா (வயது 25). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
இவர்களுக்கிடையே அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் பார்த்து பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ரமேஷ் வேறு பெண்ணுடன் கள்ளதொடர்பு வைத்துள்ளதாகவும், அதனால் அவரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்குமாறு உறவினர்களிடம் சோபியா கூறி வந்தார். ஆனால் உறவினர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த சோபியா கணவரை சேர்த்து வைக்கக்கோரி மனு கொடுப்பதற்காக தனது 3 மாத குழந்தையுடன் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலையில் வந்தார்.
பின்னர் திடீரென தான் மறைத்து வைத்து எடுத்து வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து சென்று தடுத்து நிறுத்தி சோபியாவை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.