சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவை 86 நாட்கள் ஆய்வுக்குப் பின் மத்திய அரசுக்கு ஆளுனர் அனுப்பி வைத்துள்ளார். இதை எண்ணி ஆறுதல் பட முடிகிறதே தவிர, மகிழ்ச்சியடைய முடியவில்லை. அதற்கு காரணம் நாம் இன்னும் முழு கிணற்றை தாண்டவில்லை.
நீட் விலக்கு சட்டம் ஆளுனர் மாளிகையை கடப்பதற்கே 234 நாட்கள் என்றால், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற எவ்வளவு காலம் ஆகும்? அதை விரைவுபடுத்துவதற்கு எவ்வளவு வேகமாக செயல்பட வேண்டும்? என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு அதற்கான உத்திகளை அரசு வகுக்க வேண்டும். அப்போது தான் நீட் விலக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான நோக்கத்தை நம்மால் அடைய முடியும்.
2022ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் படிப்புக்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகி, அதனடிப்படையில் செப்டம்பர் மாத இறுதியில் தான் நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கும். மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றுவிட்டால் கூட, நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மேற்கொள்ள முடியும். 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு நுழைவுத் தேர்வு ரத்து சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போது, அதற்கு 83 நாட்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது. இப்போது 3 மாதங்களுக்குள் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயமாகும்.
2017ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இந்த முறை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து நியாயங்களையும் மத்திய அரசிடம் முன்வைக்க வேண்டும். சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகள், அரசியல் கட்சிகளின் ஆதரவு உள்ளிட்ட அனைத்தையும் பெற்று நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு விரைவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...இன்னும் 2 குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்- விராட் கோலிக்கு டேவிட் வார்னர் அறிவுரை