தற்கொலை 
உள்ளூர் செய்திகள்

கோவையில் சிறையில் இருந்து ஜாமினில் வந்த கொலை கைதி திடீர் தற்கொலை

கோவையில் கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியேவந்த கைதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கோவை:

கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி கண்ணபிரான் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய அந்தோணி (வயது39). ஒர்க்‌ஷாப் தொழிலாளி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.

3 மாதங்களுக்கு முன்பு ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் தனது தந்தை ராமசாமியுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் ஆரோக்கிய அந்தோணிக்கு குடிப்பழக்கம் உள்ளது. மேலும் அவரது மனைவி 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதனால் சிறையில் இருந்து வந்த ஆரோக்கிய அந்தோணி தனது மனைவியை நினைத்து மனவேதனை அடைந்து வந்தார். சம்பவத்தன்று இரவு அவர் வழக்கம் போல அறையில் தூங்கச்சென்றார்.

மறுநாள் காலை வெகு நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராமசாமி கதவை தட்டினார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை.

பின்னர் அறையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். அப்போது ஆரோக்கிய அந்தோணி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கதவை உடைத்து உள்ளே சென்று ஆரோக்கிய அந்தோணியை மீட்டார்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.