நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரம் பகுதியை சேர்ந்தவர் சுலைமான் (வயது44). இவர் மீது நெல்லை மாநகர பகுதியில் மட்டும் 28-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. மேலும் பல்வேறு இடங்களிலும் இவர் மீது திருட்டு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுலைமான், பாளை பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளை திருட முயன்றுள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளின் உரிமையாளரும் அந்த பகுதியில் நின்ற பொதுமக்களும் அவரை கையும் களவுமாக பிடித்து, போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஐகிரவுண்டு குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று போலீஸ் நிலையத்தில் இருந்த சுலைமான், தனக்கு வயிறு மற்றும் தலைவலிப்பதாக கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மாநகர போலீஸ் கமிஷனர் துரைகுமார் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் சுரேஷ்குமார் நேரில் விசாரணை நடத்தினார். சுலைமானின் உறவினர்களையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது சுலைமானுக்கு பல்வேறு நோய்கள் இருப்பது தெரியவந்தது.
சுலைமான் மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை மாஜிஸ்திரேட் இன்று நேரில் வந்து சுலைமான் உறவினர்களிடமும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாரிடமும் நேரில் விசாரணை நடத்துகிறார்.
இதுதொடர்பாக போலீசார் 176- வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று மரணமடைந்த சுலைமானின் உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது.
பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவரது உடலை பெறவும் அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.