மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்டஅடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் மற்றும் பிற விலங்குகள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றன. அடர்ந்த வனப்பகுதியில் உணவு மற்றும் நீர் நிலைகளைத் தேடி அலையும் வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்ப்பதற்காக வனத்துறை சார்பில் வனப்பகுதியில் ஆங்காங்கே குட்டைகள்,கசிவு நீர்க் குட்டைகள் தடுப்பணைகள் மற்றும் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. கோடைகாலத்தில் வனப்பகுதியில் மரம்,செடி, கொடிகள் காய்ந்து நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி வறண்டும் காணப்படும்.
இந்த நிலையில் தற்போது நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக காட்டு யானைகள் மற்றும் பிற வனவிலங்குகள் வனப்பகுதியில் உள்ள குட்டையில் தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றில் தாகம் தீர தண்ணீர் குடித்து வருகின்றன. இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் பழனிராஜா கூறுகையில், தற்போது தொடர் மழை காரணமாக வனப் பகுதியில் கட்டப்பட்டுள்ள குட்டைகள், கசிவு நீர்க் குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தொட்டிகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது இதன் காரணமாக வருகிற மூன்று மாதங்களுக்கு வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு, பிரச்சினை இருக்காது என்றார்.