நெல்லையில் உள்ள தியேட்டரில் அதிகாலையில் திரண்டிருந்த ரசிகர்களை படத்தில் காணலாம் 
உள்ளூர் செய்திகள்

வலிமை வெளியான நெல்லை தியேட்டரில் அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

நெல்லையில் தியேட்டர் முன்பு டிரம்ஸ் மற்றும் ஆட்டம் ஆடுவதற்கு சந்திப்பு போலீசார் ஏற்கனவே தடை விதித்திருந்தனர்.

மாலை மலர்

நெல்லை:

அஜித் நடித்துள்ள வலிமை படம் இன்று நெல்லை மாநகரில் 5 தியேட்டர்களில் வெளியானது.

ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கு நடந்தது. இதனை காண ஏராளமான ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர்.

சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் அதிகாலை 1 மணிக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர்.

ஏற்கனவே தியேட்டர் முன்பு டிரம்ஸ் மற்றும் ஆட்டம் ஆடுவதற்கு சந்திப்பு போலீசார் தடை விதித்திருந்தனர்.

ஆனால் தடையை மீறி அங்கு ரசிகர்கள் மேளங்கள் இசைத்து நடனம் ஆடினர். இதனால் அங்கு திரண்டிருந்த ரசிகர்களை போலீசார் தியேட்டரை விட்டு வெளியேற்றினர்.

அதிகாலை 3 மணிக்கு பின்னரே தியேட்டருக்குள் நுழைய வேண்டும் என அறிவுறுத்தினர். அதனை கேட்காத ரசிகர்கள் தியேட்டர் முன்பு கூட்டமாக நின்றனர். சிலர் மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் நிகழ்த்தினர். இதனால் போலீசார் கூட்டத்தை கலைப்பதற்காக லேசான தடியடி நடத்தினர்.

அந்த நேரத்தில் பெரும்பாலான ரசிகர்கள் சாலையிலேயே தங்களது மோட்டார் சைக்கிள்களை விட்டு விட்டு ஓடிவிட்டனர். பின்னர் 4 மணிக்கு சிறப்பு காட்சி அமைதியாக நடந்தது.