கொடைக்கானல் 
உள்ளூர் செய்திகள்

கோடை தலங்களை காண குவியும் சுற்றுலா பிரியர்கள்

இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா (ஐ.ஆர்.சி.டி.சி.) சார்பில் நடத்தப்படுகின்ற கோடை கால சுற்றுலா பேக்கேஜ்கள் முழு அளவில் நிரம்பி விட்டன.

மாலை மலர்

சென்னை:

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2 வருடமாக சுற்றுலாத்துறை முடங்கியது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்த நிலையில் தற்போது தொற்று கட்டுக்குள் இருப்பதால் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு உள்ளன.

இதைத்தொடர்ந்து சுற்றுலா பிரியர்கள் வெளிநாடுகளுக்கும், இந்தியாவில் உள்ள குளிர்ச்சி பிரதேசங்களுக்கும் படையெடுக்க தொடங்கி உள்ளனர். தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் அதற்கேற்றவாறு பயணத் திட்டத்தை வகுத்துள்ளனர்.

இந்த ஆண்டு மே மாதம் வரையில் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 1 முதல் 9 வகுப்பு வரை உள்ளவர்களுக்கு மே 13 வரை வகுப்புகள் நடக்கிறது. சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு தற்போது நடந்து வருகிறது.

இதனால் சுற்றுலா பிரியர்கள் குழந்தைகளின் பள்ளியின் நாளை கருத்தில் கொண்டு பயணத்தை திட்டமிடுகின்றனர். இந்தியன் ரெயில்வே மற்றும் சுற்றுலா கழகம் மூலம் செயல்படுத்துகின்ற கோடைகால சுற்றுலா ‘பேக்கேஜ்’ அனைத்தும் முழு அளவில் நிரம்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானம் மற்றும் ரெயில் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சுற்றுலாக்கள் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் நிரம்பி விட்டன.

சென்னை-காட்மாண்டு, பொக்காரா உள்ளிட்ட பல இடங்களுக்கு 6 நாள் விமான சுற்றுலா, சென்னை-கவுகாத்தி, ஷிலாய் மற்றும் டார்ஜிலிங், அருணாசல பிரதேச சுற்றுலா தளங்களுக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்படுகிறார்கள். இது தவிர வாரணாசி, கயா, அலகாபாத் விமான சுற்றுலாக்கான பேக்கேஜூக்கு அதிகளவு புக்கிங் நடந்துள்ளது.

இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா (ஐ.ஆர்.சி.டி.சி.) சார்பில் நடத்தப்படுகின்ற கோடை கால சுற்றுலா பேக்கேஜ்கள் முழு அளவில் நிரம்பி விட்டன.

இவை தவிர தமிழகத்தில் உள்ள கொடைக்கானல், ஊட்டி போன்ற கோடை தலங்களுக்கும், கேரளா மாநிலத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கும் ரெயில் மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர்.

அரசின் நிறுவனம் தவிர தனியார் சுற்றுலா ஏற்பட்டாளர்கள் நடத்தி வரும் பல்வேறு சுற்றுலா மையங்களுக்கும் கூட்டம் அலைமோதுகிறது. வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் 2 வருடமாக சுற்றுலா செல்லாமல் வீடுகளில் முடங்கி இருந்த மக்கள் இந்த கோடை காலத்தை உற்சாகமாக களிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி. மற்றும் தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:-

நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் வெளி உலகத்தை பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். பணத்தை பற்றி பெரிதாக நினைப்பது இல்லை. தற்போது உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவு ஆகியவை 2 மடங்கு அதிகரித்து உள்ளது. ஆனாலும் அவற்றை பொருட்படுத்தாமல் சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

காஷ்மீர், காட்மாண்ட், அருணாசல பிரதேசம் இடங்களுக்கு விமான பயண இடங்கள் நிரம்பி விட்டன. தமிழக பகுதிகளில் உள்ள சுற்றுலா மையங்களுக்கும் பேக்கேஜ் நிரம்பி வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.