ஏ.சி. பஸ்கள் 
உள்ளூர் செய்திகள்

சென்னையில் ஏ.சி.பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டதாலும் கோடை வெப்பம் அதிகரித்து வருவதாலும் குளிர்சாதன பஸ்களை மக்கள் அதிகம் நாடுகிறார்கள்.

வெயிலின் தாக்கம் ஏப்ரல், மே மாதங்களில் தான் அதிகரிக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது.

சென்னையில் பகலில் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெயில் இப்போதே வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

பகல் மட்டுமின்றி இரவிலும் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீட்டிற்குள் படுப்பதை தவிர்த்து வெளியிலும், மொட்டை மாடியிலும் தூங்குகிறார்கள்.

வெப்பத்தின் உஷ்ணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஏ.சி.பஸ்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் 2 வருடமாக ஏ.சி. பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. இவற்றின் மூலம் தொற்று பரவக் கூடும் என்பதால் பொதுமக்களும் பயணம் செய்ய தயங்கினார்கள்.

இந்நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டதாலும் கோடை வெப்பம் அதிகரித்து வருவதாலும் குளிர்சாதன பஸ்களை மக்கள் அதிகம் நாடுகிறார்கள். பெரும்பாலும் ஐ.டி. தொழலாளர்கள் பணிபுரியும் பகுதியை மையமாக வைத்து இயக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பில் ஐ.டி. ஊழியர்கள் வீடுகளில் இருந்து பெரும்பாலும் பணிபுரிந்து வந்தனர். தற்போது 50 சதவீதம் பேர் அலுவலகங்களில் பணியாற்ற தொடங்கியுள்ளனர். இதனால் ஏ.சி.பஸ்களில் கூட்டம் அதிகரித்துள்ளது.

பிராட்வே- வண்டலூர் (21.ஜி), கோயம்பேடு பஸ் நிலையம் - கேளம்பாக்கம் (570), பிராட்வே - கேளம்பாக்கம் (102), திருவான்மியூர்-தாம்பரம் (91) வழித்தடங்களில் ஏ.சி.பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர் சாலை, ரேடியல் சாலை வழியாக ஏ.சி.பஸ்கள் பெரும்பாலும் ஓடுகின்றன.

தற்போது ஏ.சி.பஸ்களில் பயணம் செய்ய கூட்டம் அதிகரித்து வருகிறது. அடிக்கிற வெயிலை தாங்க முடியாமல் ஏ.சி.பஸ்களிலும், மெட்ரோ ரெயில்களிலும் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் 48 ஏ.சி.பஸ்கள் இயக்கப்படுகின்றன இவை பெரும்பாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குறைவாக இயக்கப்படும். ஆனால் தற்போது கூட்டம் அதிகரித்து வருவதால் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் முழு அளவில் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏ.சி.பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.15 ஆகவும் அதிகபட்சமாக ரூ.80 ஆகவும் உள்ளன. வெயிலின் தாக்கத்தால் பணத்தை பொருட்படுத்தாமல் சிறிதும் நேரம் இதமாக பயணம் செய்ய குளிர்சாத வசதியை பொதுமக்கள் நாடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்... இந்தியாவில் புதிதாக 1,335 பேருக்கு கொரோனா பாதிப்பு