பாளை தெற்குபஜாரில் 3-வது நாளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார். 
உள்ளூர் செய்திகள்

பாளை போலீஸ் நிலையம் அருகே நடந்த தி.மு.க. வட்ட செயலாளர் கொலையில் 5 பேர் அதிரடி கைது

பாளை போலீஸ் நிலையம் அருகே நடந்த தி.மு.க. வட்ட செயலாளர் கொலையில் 5 பேர் அதிரடி கைது முக்கிய பிரமுகரும் சிக்குகிறார் நெல்லை-5

நெல்லை:

நெல்லை மாவட்டம் பாளை யாதவர் உச்சி மாகாளி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுதாஸ் என்ற அபே மணி(வயது 32). நெல்லை மாநகராட்சி 35-வது வார்டு தி.மு.க. வட்ட செயலாளராக இருந்த இவர் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார்.

இவரது வீடு பாளை போலீஸ் நிலையத்தின் அருகே உள்ளது. நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீட்டின் முன்பு நின்று சிலருடன் பேசிக் கொண்டிருந்தபோது காரில் வந்த 5 பேர் கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.

இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். மாநகர பகுதியில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.

அதில் காரின் பதிவெண் சரியாக தெரியவில்லை. அதே நேரத்தில் அந்த கார் முருகன்குறிச்சி, வண்ணார்பேட்டை, சந்திப்பு, டவுன் வழியாக குற்றாலம் ரோட்டில் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கொலையாளிகள் கேரளா மாநிலத்திற்கு தப்பி சென்றிருக்கலாம் என்று ஒரு தனிப்படை அங்கு விரைந்தது. மேலும் 2 தனிப்படையினர் தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் பகுதிகளில் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் வைத்து தனிப்படையினர் 5 பேர் கும்பலை பிடித்தனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பேச்சிமுத்து(27), விக்ணேஷ்வரன்(32), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன்(30), கருப்பசாமி, ஆசைமுத்துபாண்டி ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்களை நெல்லைக்கு கொண்டுவந்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அபே மணி ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார். குறுகிய காலத்தில் அவர் தி.மு.க.வில் வளர தொடங்கி உள்ளார். நடைபெற உள்ள தேர்தலில் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு தனது தாயாரை நிறுத்துவதற்கும் விருப்பமனு வாங்கியிருந்தார்.

இவரது வளர்ச்சி அதே பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அபே மணி தன்னைவிட பெரிய அளவில் உயர்ந்துவிடுவாரோ என்ற கோபத்தில் தனது நண்பர்களை அழைத்துள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள 5 பேருடனும் ஒன்றாக மது அருந்திய அந்த பிரமுகர்,நடந்தவற்றை 5 பேரிடமும் தெரிவித்துள்ளார். இதனால் நண்பனுக்காக 5 பேரும் சேர்ந்து அபே மணியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து 5 பேரிடமும் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் முக்கிய பிரமுகரும் சிக்குவார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே அபே மணியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.50 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்றும் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதனால் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அபே மணி வீட்டு தெருக்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.