பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45). பெயிண்டர். இவர் அவரது நண்பரான பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த முத்துவேல் (வயது 52) என்பவருடன் சேர்ந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் பல்லடம் பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தனர்.
இந்தநிலையில் முத்துவேலின் சம்பள பணம் மாரிமுத்துவிடம் இருந்துள்ளது. அந்த பணத்தை தா என்று மாரிமுத்துவிடம், முத்துவேல் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த முத்துவேல் பீர் பாட்டிலை உடைத்து மாரிமுத்துவை குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த, மாரிமுத்துவை அக்கம், பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பல்லடம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து முத்துவேலை கைது செய்தனர். இந்தநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.