கோவை:
நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 24-ந் தேதி வலிமை திரைப்படம் ரிலீசானது.
அன்றைய தினம் கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள தியேட்டரில் படத்தின் சிறப்பு காட்சி வெளியாகி இருந்தது. தியேட்டர் முழுவதும் அஜித் ரசிகர்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தியேட்டர் அருகே பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பியோடினர். இதில் தியேட்டர் முன்பு நின்றிருந்த இந்து முன்னணி உறுப்பினரான கோவை ரத்தினபுரியை சேர்ந்த நவீன்குமார்(22) என்பவர் காலில் காயம் அடைந்தார். மேலும் மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தது.
இதுகுறித்து காட்டூர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளையும் பார்வையிட்டனர். தொடர்ந்து 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த லட்சுமண்(27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் ரத்தினபுரியில் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வருகிறேன். தீவிர அஜித் ரசிகரான நான் சம்பவத்தன்று நண்பர்களுடன் படம் பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றேன்.
அப்போது அங்கு டிக்கெட் விற்று கொண்டிருந்த நவீன்குமார் என்பவரிடம் சென்று டிக்கெட் விலை கேட்டோம். அவர் ரூ. 500 என தெரிவித்தார்.
இதன் காரணமாக அவருக்கும், எனது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அவர் எங்களை தாக்கினார். இதனால் அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது. உடனடியாக நாங்கள் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி விட்டு வந்து, தியேட்டர் முன்பு நின்றுகொண்டிருந்த நவீன் குமார் மீது வீசிவிட்டு தப்பி சென்றேன். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.