உள்ளூர் செய்திகள்

சென்னிமலை அருகே ஒரு மாத ஆண் குழந்தை திடீர் மரணம்- போலீசார் விசாரணை

குழந்தையை பார்த்தபோது எவ்வித அசைவும், மூச்சின்றியும் இருந்தது.சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கொளத்துப்பாளையம் சாலை சென்னியாண்டவர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி ஸ்ரீதரின் மனைவிக்கு 2-வதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை 900 கிராம் எடையுடன் பிறந்ததால், தொடர்ந்து 22 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 24-ம் தேதி குழந்தையை மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ஸ்ரீதர் வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்நிலையில் கடந்த 4-ம் தேதி ஸ்ரீதரின் மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்தார்.

மறுநாளான நேற்று காலை குழந்தையை பார்த்தபோது எவ்வித அசைவும், மூச்சின்றியும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் அவரது மனைவியுடன் குழந்தையை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT