தருமபுரி:
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்துள்ள பாளையம்புதூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது43), இவரது மனைவி மாதம்மாள் (39).
இந்த நிலையில் கோவிந்தராஜீக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நீ இப்படி தினமும் மது குடித்து விட்டு வந்தால் எப்படி குடும்பம் நடத்துவது என்று மாதம்மாள் கேட்டுள்ளார். இதனால் நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மாதம்மாள், தனது கணவர் என்று கூட பாராமல் கோவிந்தராஜை அடுப்பு பற்ற வைக்க பயன்படுத்தப்படும் ஊது குழலால் தலையில் சரமாரியாக அடித்துள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். பின்னர் சிறிது நேரத்தில் கோவிந்தராஜ் துடி துடித்து உயிரிழந்தார்.
இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் மாதம்மாள் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து பாளையம்புதூர் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணனுக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்.
அவர் வந்து பார்வையிட்டு இது பற்றி தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
குடும்ப தகராறு காரணமாக அடித்து கொலை செய்யப்பட்ட கோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மாதம்மாளை தேடி வருகின்றனர்.