சென்னை:
மயிலாப்பூரைச் சேர்ந்த கோடீஸ்வர தம்பதிகளான ஸ்ரீகாந்த்-அனுராதா தம்பதியினர் நகை, பணத்துக்காக கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் சென்னை மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள மகள்,மகனை பார்த்து விட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பிய தம்பதியை அவர்களது வீட்டில் வேலை செய்த கார் டிரைவர் கிருஷ்ணா, அவரது நண்பர் ரவிராய் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து விட்டு 1000 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிய போது சிக்கினர். கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஸ்ரீகாந்த் சொத்து ஒன்றை விற்பனை செய்த வகையில் ரூ.40 கோடி பணம் கிடைத்ததாக கிருஷ்ணாவிடம் கூறி இருக்கிறார். இந்த பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே டிரைவர் கிருஷ்ணாவும், ரவிராயும் திட்டம் போட்டு செயல்பட்டதும், அந்த பணம் இல்லாததால் நகைகளை மூட்டை கட்டி அள்ளிக் கொண்டு நேபாளம் தப்பும் வழியில் பிடிபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
ஸ்ரீகாந்த், அனுராதா தம்பதியை கொன்று விட்டு மாமல்லபுரம் அருகே உள்ள சூலேரிக்காடு பண்ணை வீட்டில் ஒரே குழியில் போட்டு இருவரையும் கொலையாளிகள் புதைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளிகளான கிருஷ்ணா, ரவிராய் இருவரையும் பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று உடல்களை தோண்டி எடுத்தனர்.
இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. வருவாய் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறும் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படுகிறது.
ஸ்ரீகாந்த், அனுராதா தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இவர்களில் மகள் சுனந்தா மூத்தவர். அவர் திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வருகிறார். கலிபோர்னியாவில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக இருக்கும் இவருக்கு பிறந்துள்ள குழந்தையை பார்ப்பதற்குத்தான் ஸ்ரீகாந்த், மனைவி அனுராதாவுடன் சென்று இருந்தார். மகன் பெயர் ஜாஸ்வத். இவர் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து வருகிறார்.
இப்படி தங்களது பிள்ளைகள் இருவரும் அமெரிக்காவில் இருப்பதை உறவினர்களிடமும், நண்பர்களிடமும் ஸ்ரீகாந்தும், அனுராதாவும் பெருமையாக சொல்லி வந்துள்ளனர். இந்த நிலையில்தான் இருவரும் பரிதாபமாக கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் பெற்றோரின் இறுதி சடங்குகளில் பங்கேற்பதற்காக சுனந்தா, ஜாஸ்வத் இருவரும் இன்று கண்ணீருடன் சென்னை வருகிறார்கள். ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் ஸ்ரீகாந்த், அனுராதாவின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. நாளை இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.