கொள்ளை 
உள்ளூர் செய்திகள்

முத்துமாரியம்மன் கோவிலில் ஐம்பொன் விநாயகர் சிலை- நகை கொள்ளை

முத்துமாரியம்மன் கோவிலில் ஐம்பொன் விநாயகர் சிலை- நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணைநல்லூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெரிய ஆனைவாரி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூசாரி சுப்பிரமணியன் வழக்கம்போல் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

நள்ளிரவு சமயம் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் இருந்த ஐம்பொன் விநாயகர் சிலை, அம்மன் கழுத்தில் இருந்த 1/2 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். மேலும் அதே பகுதியில் உள்ள பாஸ்கர் என்பவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இன்று காலைவழக்கம் போல் கோவிலை திறக்க சென்ற பூசாரி கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது ஐம்பொன் விநாயகர் சிலை மற்றும் 1/2 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த கோவிலில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் கைரேகை மற்றும் தடவியல் நிபுணர் அசாருதீன் கோவிலில் தடயங்களை சேகரித்து வருகிறார். மேலும் விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொள்ளை நடந்த கோவிலில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.