வத்தலக்குண்டு:
கொடைக்கானல் மன்னவனூரைச் சேர்ந்தவர் மீனாசாமி (வயது 55). இவரது மனைவி ஜெயக்கொடி (52). இவர்கள் கடந்த சில வருடங்களாக வத்தலக்குண்டு அண்ணாநகரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். மகளை மஞ்சள்பரப்பை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மஞ்சள்பரப்பில் உறவினர் இறந்துவிட்டதால் அங்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் மீனாசாமி தனது மனைவியுடன் மாலை வாங்கிக்கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தார்.
வத்தலக்குண்டு பைபாஸ் அ.பிரிவு பகுதியில் இவர்கள் சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி ரேசன் கடைக்கு பொருட்கள் ஏற்றிவந்த லாரி அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மீனாசாமி மற்றும் அவரது மனைவி ஜெயக்கொடி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பட்டிவீரன்பட்டி போலீசார் விரைந்து வந்தனர். விபத்தில் பலியான தம்பதியின் உடல்களை மீட்டு வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய நல்லாம்பட்டி வாழைக்காய்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் வீரபாண்டி (29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.