உள்ளூர் செய்திகள்

மறைமலைநகரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: 2 வாலிபர்கள் பலி

சுனில்குமார் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வண்டலூர்:

செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஏழுமலை (வயது28), விமல்ராஜ்(23). இவர்கள் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தனர்.

நேற்று இரவு அவர்கள் பணிமுடிந்ததும் உடன் வேலைபார்க்கும் நண்பரான செய்யூரை சேர்ந்த சுனில்குமார் என்பவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

இரவு 11.30 மணியளவில் அவர்கள் மறைமலைநகர் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள கார் கம்பெனி அருகில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஏழுமலை, விமல்ராஜ், சுனில்குமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

படுகாயம் அடைந்த ஏழுமலை மற்றும் விமல் ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சுனில்குமார் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சுனில் குமாரும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.