மீனவர்கள் வலையில் இருந்து மீன்களை எடுத்ததை காணலாம் 
உள்ளூர் செய்திகள்

கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கிய மீன்கள்

கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் மீன்கள் சிக்கியது. இந்த மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டு தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை காரணமாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் 10 நாட்களுக்கும் மேலாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்ததால் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டு வந்தனர்.

மழை நின்றவுடன் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் கோடியக்கரையில் இருந்து ேநற்று முன்தினம் நூற்றுக்கணக்கான பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள், மீன்களை பிடித்து கொண்டு நேற்று காலையில் கரைக்கு திரும்பினர்.

மீனவர்கள் வலையில் திருக்கை, மட்லீஸ், வாவல், காலா, நண்டு உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் சிக்கின. இந்த மீன்களை வாங்க கடற்கரையில் வியாபாரிகள் குவிந்தனர். மீன்களை வாங்கிய வியாபாரிகள், அதை கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது நாள் ஒன்றுக்கு 2 டன் திருக்கை, மட்லீஸ் மீன்களும், மற்ற மீன்கள் 1 டன்னும் சிக்குவதால் மீனவர்கள் தெரிவித்தனர். நேற்று காலா மீன் ஒரு கிலோ ரூ. 550-ம், வாவல் மீன் ரூ.900-க்கும் மட்லீஸ் மீன் ரூ.100-க்கும், திருக்கை ரூ.150-க்கும் நீலக்கால் நண்டுரூ.850-க்கும், புள்ளி நண்டுரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதிக அளவில் சிக்கிய மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.