தமிழகத்தில் கடந்த 2 மாதமாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்தது. கட்டுபாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டன. ஆனால் முகக்கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என மருத்துவ துறை வலியுறுத்தியது.
இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் படிக்கும் மாணவிகள் சில பேருக்கு காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன. பரிசோதனை முடிவில் 3 மாணவிகளுக்கு தொற்று உறுதியானது. தொடர்ந்து சுகாதார துறையினர் கண்காணிப்பு மற்றும் தீவிர நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.
பாதிக்கப்பட்டுள்ள மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விபரங்கள் கண்டறியப்பட்ட 18 மாணவர்களுக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட 12 பேருக்கும் லேசான பாதிப்பு உள்ளதால் அங்குள்ள கட்டிடத்தில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஐ.டி வளாகத்தில் ஆய்வு செய்தார். வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 666 பேருக்கு பரிசோதனை செய்ததில் முடிவு வெளியாகி உள்ளது. ஐ.ஐ.டி மாணவர்கள், ஊழியர்கள் என இதுவரையில் 30 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3 நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஐ.டி. வளாகம் தொற்று பகுதியாக மாறி இருப்பதால் அங்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... மேலும் 800 மில்லியன் டாலர் உதவி - ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்தார் அதிபர் ஜெலன்ஸ்கி