ஆட்டோ 
உள்ளூர் செய்திகள்

குறைந்தபட்ச ஆட்டோ கட்டணத்தை ரூ.25ஆக நிர்ணயிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு கோரிக்கை

ஓலா, ஊபர் போன்ற ஆட்டோ ‘ஆப்’களை தடை செய்து விட்டு தமிழக அரசே ‘ஆட்டோ ஆப்’ சேவையை தொடங்கி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மாலை மலர்

சென்னை:

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 14 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் இயக்கம் என்ற பெயரில் கவன ஈர்ப்பு நிகழ்வை நடத்தினர்.

இதில் எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யூ.சி., ஐ.என்.ஓ.டி.ஏ., எம்.எல்.எப்., எல்.எல்.எப்., பாட்டாளி தொழிற்சங்கம், தே.மு.தொ.ச., உரிமை குரல்- உரிமை கரங்கள் சங்கம், எஸ்.டி.டி.யூ., குட்வில் ஏ.ஏ.டி.யூ. ஆகிய 14 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓலா, ஊபர் போன்ற ஆட்டோ ‘ஆப்’களை தடை செய்து விட்டு தமிழக அரசே ‘ஆட்டோ ஆப்’ சேவையை தொடங்கி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

புதிய மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்றும், மோட்டார் சைக்கிள் செயலியான ரேபிடோவை தடை செய்ய வேண்டும். எரிபொருள் கட்டண உயர்வுக்கு ஏற்பவும், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டும் மீட்டர் கட்டணத்தை உயர்த்திட வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

கடந்த 2013-ம் ஆண்டு 1.8 கி.மீட்டருக்கு ரூ.25 கட்டணம், 1 கி.மீட்டருக்கு ரூ.12 எனவும் (குறைந்தது) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது பெட்ரோல் விலை ரு.60ஆக இருந்தது. இன்று இரண்டு மடங்கு அளவுக்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.

தற்போது பெட்ரோல் விலை ரூ.113 ஆக இருக்கிறது. அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதார செலவுகளும் அதிகரித்துள்ளன.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தி கட்டணத்தை 2 மடங்காக அதிகரிக்க வேண்டும். குறைந்தபட்ச கட்டணமாக 2013-ல் நியமிக்கப்பட்ட ரூ.12-ஐ 25 ஆக உயர்த்த வேண்டும்.

இதேபோன்று 1.8 கி.மீட்டர் தூரத்துக்கான ரூ.25 கட்டணத்தை ரூ.50 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.