உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் வியாபாரி கொலை: மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 2 பேர் கைது

கடல்மணி என்பவருக்கும், முத்துராமலிங்கராஜனின் மனைவி உஷாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கள்ளக்காதலை முத்துராமலிங்கராஜன் கண்டித்து வந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வட்டாலூரை சேர்ந்தவர் முத்துராமலிங்க ராஜன்(வயது 45). பழைய இரும்பு வியாபாரி.

கடந்த 9-ந்தேதி காலை பூலாங்குளம் காட்டுப்பகுதியில் முத்துராமலிங்கராஜன் கை, கால்கள் முறிக்கப்பட்டு அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அதே பகுதியை சேர்ந்த கடல்மணி என்பவருக்கும், முத்துராமலிங்கராஜனின் மனைவி உஷாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அதனை முத்துராமலிங்கராஜன் கண்டித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து உஷாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உஷாவின் கள்ளக்காதலன் கடல்மணி தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து முத்துராமலிங்கராஜனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து உஷாவை போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவான கடல்மணியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னலை கொண்டு ஆய்வு செய்தபோது அவர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியில் பதுங்கியிருப்பதாக காட்டியது.

உடனே தனிப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது தூத்துக்குடியை நோக்கி அவர் சென்று கொண்டிருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது. அதனை வைத்து தனிப்படையினர் பின்தொடர்ந்து சென்று தூத்துக்குடியில் பதுங்கியிருந்த கடல்மணியை கைது செய்தனர்.

அவரது நண்பரான குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.