விபத்து பலி 
உள்ளூர் செய்திகள்

மணப்பாறை அருகே பஞ்சராகி நின்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி

மணப்பாறை அருகே பஞ்சராகி நின்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வையம்பட்டி:

மணப்பாறை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேனி மாவட்டம், பெரிய குளம் பகுதியைச் சேர்ந்த அன்னக்கொடி மாயன் (வயது 50), முகமது அஸ்லம் (40), வேல்முருகன், ராதாகிருஷ்ணன், சிவக்குமார் ஆகிய 5 பேரும் ஒரு காரில் திருச்சியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள திருச்சிக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து பெரியகுளம் நோக்கி இரவு புறப்பட்டுச் சென்றனர்.

கார் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டி பிரிவு சாலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, தஞ்சாவூரில் இருந்து மதுரைமாவட்டம், வாடிப்பட்டிக்கு ரஸ்க் தூள் ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு வேன் பஞ்சராகி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது. அந்த வேனின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் அனைவரும் பலத்த காயம் அடைந்தனர். இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனே இதுபற்றி ஆம்புலன்ஸ்சுக்கும், வையம்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் இடிபாடுகளுக்குள் சிக்கி அன்னக்கொடி மாயன், முகமது அஸ்லம் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்த இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயமடைந்த மற்ற 3 பேரும் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நள்ளிரவில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுஜித் குமார், சம்பவ இடத்திற்கு சென்று விபத்து நடந்த காரணம் குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தினார். மேலும் போலீஸ் துணை சூப்பிரண்ட் ஜனனி பிரியா, வையம்பட்டி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்ளிட்டோரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களின் ஓட்டுனர்கள் ஓய்வு எடுப்பதற்காக ஆங்காங்கே இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அதுபோன்று ஓய்விடம் என்பது சில இடத்தில் இருப்பதே அரிதான ஒன்று தான்.

இதுமட்டுமின்றி இரவு நேரம் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் பழுதாகி நின்று விட்டால் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் சுங்கச்சாவடியினர் உடனே அந்த இடத்திற்கு சென்று விபத்து நிகழா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் அந்த நடைமுறையே இல்லாதது போல் விட்டு விடுகின்றனர். இதன் காரணமாகத்தான் வாகனங்கள் சாலையோரங்களில் நிற்பதும் அந்த வழியாக வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவமும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. நேற்று நிகழ்ந்த சம்பவத்தில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் சுங்கச்சாவடியில் ரோந்து செல்வோர் எஸ்.பி. கடுமையான கண்டித்துள்ளார். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.