போரூர்:
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், தனலட்சுமி நகரை சேர்ந்தவர் மகா தேவன். இவரது மனைவி கலா(வயது50).
இவர் அதே பகுதி மெட்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்த்து வந்தார். கடந்த 20-ந் தேதி வழக்கம் போல வீட்டு வேலை பார்க்க சென்ற கலா பின்னர் திரும்பி வர வில்லை. அவர் மாயமாகி இருந்தார். அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இதுபற்றி மகாதேவன் மதுரவாயல் போலீசிலும் புகார் செய்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. அங்கு வசிப்பவர்கள் சென்று பார்த்தபோது கலா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கழிவுநீர் தொட்டியின் மேல் பகுதி திறந்து கிடந்ததால் அதில் கலா தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மாயமான 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டு உள்ளார்.