முன்னாள் துணைவேந்தர் சூரப்பா 
உள்ளூர் செய்திகள்

விசாரணை ஆணையத்தின் அறிக்கையை முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு

விசாரணை ஆணையத்தின் அறிக்கையை 2 வாரங்களில் சூரப்பாவுக்கு அரசு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அது தொடர்பாக விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அ.தி.மு.க. அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விசாரணை அறிக்கை அடிப்படையில் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

நீதிபதி பொன்.கலையரசன் ஆணைய அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தாக்கல் செய்த நிலையில், அதன் நகலை சூரப்பாவுக்கு வழங்கலாமா என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் விசாரணையின் அறிக்கையை பல்கலைகழக வேந்தரான ஆளுனருக்கு மட்டுமே அனுப்ப உள்ளதாகவும், அதை சூரப்பாவிற்கு தர இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது சூரப்பா தரப்பில் தனக்கு எதிரான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதே வேந்தரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதி பார்த்திபன் இன்று அறிவித்தார்.

நீதிபதி தீர்ப்பில், “விசாரணை ஆணையத்தின் அறிக்கையை 2 வாரங்களில் சூரப்பாவுக்கு அரசு வழங்க வேண்டும். அந்த அறிக்கையை படித்து பார்த்து 4 வாரங்களில் சூரப்பா, தமிழ்நாடு அரசுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.