சென்னை ஐகோர்ட் 
உள்ளூர் செய்திகள்

கோவை கூட்டுறவு வங்கி தலைவரின் சஸ்பெண்டு ரத்து - ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு

நகை கடன் தள்ளுபடி உத்தரவை ஏற்க மறுத்த கோவை கூட்டுறவு வங்கி தலைவரின் சஸ்பெண்டை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

கோவை மாவட்டம் கோட்டூர் நகர கூட்டுறவு வங்கி தலைவராக இருப்பவர் பாலகிருஷ்ணன்.

இவர் தமிழக அரசு நகை கடன் தள்ளுபடி செய்து பயனாளிகளுக்கு வழங்க உத்தரவிட்டதை ஏற்க மறுத்து அவ்வாறு வழங்கினால் வங்கியில் முதலீடு செய்துள்ள உறுப்பினர்களின் பங்கு தொகை நிரந்தர,சேமிப்பு, வைப்பு தொகை ஆகியவை பாதிக்கப்பட்டு வங்கி திவாலாகும் நிலை உருவாகும் என்பதால் நகை கடன் தள்ளுபடி செய்ய தமிழக அரசே தேவையான தொகையை வங்கிக்கு வழங்கினால் மட்டுமே நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் பயனாளிகளுக்கு நகையை திருப்பி வழங்க முடியும் என இயக்குனர்கள் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.

இதை தொடர்ந்து தமிழக அரசு கோட்டூர் நகர வங்கி தலைவரான பாலகிருஷ்ணனை கடந்த மாதம் 26-ந்தேதி சஸ்பென்டு செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி பாலகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி வேலுமணி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் இன்பதுரை, எல்.பி.சண்முகசுந்தரம் ஆகியோர் இந்த உத்தரவு கூட்டுறவு சட்டத்திற்கு எதிரானது என்று வாதிட்டனர்.

இதைத் தொடர்ந்து அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி வேலுமணி உத்தரவிட்டார்.