பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் தனியார் நிலக்கரி முனையம் உள்ளது. இங்கிருந்து தனியார் அனல் மின் நிலையங்கள், இரும்பு உருக்கு ஆலை, வாகன டயர்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, ஆயில் கம்பெனி மாத்திரை தயாரிக்கும் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் நிலக்கரிகளை ஏற்றி செல்கின்றன.
இந்த நிலையில் நிலக்கரி ஏற்றி செல்லும் ஒப்பந்த லாரிகளுக்கு வாடகையை 30சதவீதம் உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி சுற்றுவட்டார நிலக்கரி ஏற்றி செல்லும் டிப்பர் லாரி மற்றும் டிரைலர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டு உள்ளனர்.
லாரி உரிமையாளர்களின் போராட்டம் இன்று 2வது நாளாக நீடித்து வருகிறது. இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சுரேஷ் தலைமையில் நிலக்கரி முனையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தையொட்டி நிலக்கரி ஏற்றி செல்லும் லாரிகள் நிலக்கரி முனையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் தொழிற்சாலைகளுக்கு நிலக்கரி கொண்டு செல்லும் பணி முழுவதும் முடங்கி உள்ளன.