பல்லடம்:
திருப்பூர்,கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள், இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
காடா ஜவுளி துணி விற்பனையை ஆதாரமாக கொண்டு ஜவுளி உற்பத்தியாளர்களும், அவர்கள் தரும் கூலியை அடிப்படையாக கொண்டு, விசைத்தறியாளர்களும் தொழில் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கூலி உயர்வு கோரி கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி முதல் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூலி உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் சோமானூர் ரகத்திற்கு 19 சதவீதம், இதர ரகத்துக்கு 15 சதவீதம் கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்று பல்லடம், மங்கலம், வேலம்பாளையம், கண்ணம்பாளையம் விசைத்தறி சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றன.
ஆனால் பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்கவில்லை என்றும், கையெழுத்து வடிவில் கூலி உயர்வு ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என சோமனூர் விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் இன்று பல்லடம் காரணம் பேட்டையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
அதன்படி இன்று காலை காரணம்பேட்டையில் சோமானூர் விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9மணி முதல் மாலை 5மணி வரை போராட்டம் நடக்கிறது. இது போல் வருகிற 25-ந்தேதி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.