கருமத்தம்பட்டி:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து விசைத்தறி உரிமையாளர்கள் நூல் வாங்கி துணியாக நெய்து கொடுக்கின்றனர். இதற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் கூலி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 7 வருடங்களாக கூலி உயர்வு வழங்காததை அடுத்து விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 9-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆனால் கூலி உயர்வு தொடர்பாக நடந்த அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியில் முடிந்த நிலையில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டு கமிட்டி கூட்டம் நேற்று மாலை சோமனூரில் உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
இதில் கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து வருகிற திங்கட்கிழமை தெக்கலூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், அடுத்தகட்டமாக அனைத்து விசைத்தறி கூடங்களிலும், விசைத்தறி தொழிலாளர்கள் வீடுகளிலும் கறுப்பு கொடி கட்டி தங்களுடைய எதிர்ப்பை ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தெரிவித்து மற்றும் அரசின் கவனத்தை ஈர்ப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டம் முடிந்து நிர்வாகிகள் வெளியே வந்தபோது பாவு நூல் ஏற்றிக்கொண்டு அவ்வழியாக வாகனங்கள் வந்தன. அதைக்கண்டு ஆவேசமடைந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சோமனூர் பஸ்நிலைய பகுதியில் வாகனங்களை சிறைபிடித்து தடுத்து நிறுத்தினர். கருமத்தம்பட்டி போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தி பாவு நூல் ஏற்றி வந்த வாகனங்களை விடுவித்தனர்.
சொந்தமாக நூல் வாங்கி விசைத்தறி தொழிலில் ஈடுபடும் சிலர் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பணியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாவு நூல் ஏற்றி வந்த வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.