சென்னை:
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்ற பெண் சென்னையில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். அவருடன் பணிபுரிந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தகுமார் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு சிவரஞ்சனியை காதலிக்க வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் நடந்து செல்லும்போது அரவிந்தகுமார் சிவரஞ்சனியை காதலிக்குமாறு வற்புறுத்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவரஞ்சனியை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். முகம் மற்றும் கைகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டு மயக்கமடைந்த சிவரஞ்சனியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அரவிந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அரவிந்தகுமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,500 அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த ஆய்வாளர் மற்றும் போலீசாரை சென்னை பெருநகர காவல் உயரதிகாரிகள் பாராட்டினர்.