நெல்லை:
பாளையை அடுத்த பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த வைகுண்டம் (வயது46). நில புரோக்கர்.
இவரை கடந்த 10-ந்தேதி பாளையங்கால் வாய் பகுதியில் குளிக்க சென்றபோது ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
இதுதொடர்பாக பாளை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பெருமாள் என்பவரது கொலை வழக்கில் வைகுண்டம் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு இருப்பதும், அவர் சாட்சி சொல்லக்கூடாது என்பதற்காக எதிர்தரப்பினர் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜன் (67), அவரது மனைவி லீலா (57) மற்றும் உறவினர்கள் பாபு (37), ஜாக்குலின் (54) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்திருந்தனர்.
எனினும் இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளான ராஜன்- லீலா தம்பதிகளின் மகன்கள் செல்வராஜ், பிரபாகரன் மற்றும் லீலாவின் தங்கை மகன்கள் பிலீப், ஆண்டனி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
அவர்கள் சென்னை, தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் 2 தனிப்படைகள் அங்கு விரைந்தன.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பதுங்கி இருந்த 3-வது மற்றும் 4-வது குற்றவாளிகளான பிலீப் மற்றும் அந்தோணி ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளிகளான செல்வராஜ், பிரபாகரன் ஆகியோரை பிடிக்க சென்னையில் தனிப்படை முகாமிட்டுள்ளது.