விசாரணை 
உள்ளூர் செய்திகள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- அ.தி.மு.க. பிரமுகர் அனுபவ்ரவியிடம் தனிப்படை விசாரணை

கோவையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், நகைக்கடை உரிமையாளருமான அனுபவ் ரவியிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்த தனிப்படை போலீசார் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பினர்.

கோவை:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமினில் வெளியில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

தற்போது இந்த வழக்கு தொடர்பாக 5 தனிப்படை அமைக்கப்பட்டு மறுவிசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். கனகராஜ் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய போது, ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த அவர், சில காலம் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஆறுகுட்டியிடம் ஒன்றரை வருடம் டிரைவராக இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டியிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

மறுநாள் அவரது மகன் அசோக், அவரது தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாராயணன் ஆகிய 3 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 3 மணி நேரம் நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த வழக்கில் கோவையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், நகைக்கடை உரிமையாளருமான அனுபவ் ரவியிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்த தனிப்படை போலீசார் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பினர்.

இதையடுத்து இன்று காலை அவர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் முன்னிலையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரிடம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான பல கேள்விகளை கேட்டு விசாரித்தனர்.

அனுபவ் ரவி கோவை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலளாராக உள்ளார். மேலும் இவர் கொடநாடு வழக்கு குறித்து தன்னிடம் மறு விசாரணை நடத்தக் கூடாது என கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் தான் அ.தி.மு.க. பிரமுகரான அனுபவ் ரவியிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.