கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

கரூரில் 7 வட்டங்களில் நாளை பட்டா பெயர் மாற்ற சிறப்பு முகாம்கள்

கரூர் மாவட்டத்தில் நாளை 7 வட்டங்களில் பட்டா மாறுதல் மற்றும் சிறப்பு திருத்த முகாம்கள் நடைபெற உள்ளதாக கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

கரூர் மாவட்டத்தில் 7 வட்டங்களில் நாளை பட்டா பெயர் மாற்றம், திருத்தம் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது என கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கரூர் மாவட்டத்தில் 7 வட்டங்களில் நாளை (ஜனவரி 5-ந்தேதி) மற்றும் 7-ந்தேதி 3 வட்டங்களில் என 2 நாட்கள் பட்டா பெயர் மாற்றம், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

நாளை கரூர் வட்டம் பாகநத்தம் மற்றும் மணவாடி, மண்மங்கலம் வட்டம் ஆண்டாங்கோவில், அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி மேற்கு, கிருஷ்ணராயபுரம் வட்டம் ரெங்கநாதபுரம் தெற்குவீரியபாளையம், கடவூர் வட்டம் சேர்வைக்காரன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள், புகழூர் வட்டம் தவுட்டுப்பாளையம் ஈ.வெ.ரா. மண்டபம், குளித்தலை வட்டம் கல்லடை சமுதாயக்கூட்டம் மற்றும் வதியம் ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது. வருகிற 7-ந்தேதி கரூர் வட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், குளித்தலை வட்டம் வதியம் ஊராட்சி மன்ற அலுவலகம், வடசேரி சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

எனவே பொதுமக்கள் பட்டா திருத்தம் தொடர்பான கோரிக்கை மனுக்களை சிறப்பு முகாம்களில் வழங்கி தங்களது நிலப்பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கண்டு பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.