உள்ளூர் செய்திகள்

பிரதமர் மோடி-அமித்ஷா வாகன பேரணி நடத்தியதால் குமரி மக்கள் ஏமாற மாட்டார்கள்- விஜய் வசந்த்

குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டம் பகுதியில் விஜய் வசந்த் பிரசாரத்தை தொடங்கினார்.வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக, மிக முக்கியமான தேர்தல்.

நாகர்கோவில்:

இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் தினமும் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அவரை மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்த்தூவியும் உற்சாகமாக வரவேற்கிறார்கள்.

குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டம் பகுதியில் விஜய் வசந்த் பிரசாரத்தை தொடங்கினார். இரணியல், திங்கள் நகர், ரீத்தாபுரம், குறும்பனை, வாணியக்குடி, கோடி முனை, குளச்சல் கடற்கரை, கூத்தவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை திறந்த வாகனத்தில் சென்று சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பிரின்ஸ் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.டி.உதயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து குருந்தங்கோடு, கண்டன்விளை, பேயன்குழி, வில்லுக்குறி, பள்ளம், பரசேரி, ஆளூர், சுங்கான் கடை, பெருவிளை, காரங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக, மிக முக்கியமான தேர்தல். பா.ஜனதா அரசை அகற்ற வேண்டிய தேர்தல். இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். மக்களாட்சி மலர வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அதற்கு நீங்கள் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என சொன்னார்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை 10 பைசா கூட செலுத்தவில்லை. மாறாக, ஏழை மக்களை வங்கி கணக்கை தொடங்க வைத்து மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற காரணத்தைக் காட்டி மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளனர். பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்து மக்கள் விரோத ஆட்சியை நடத்துகின்றனர்.

SCROLL FOR NEXT