கண்ணன் ஆதித்தன் 
உள்ளூர் செய்திகள்

மெர்க்கண்டைல் வங்கி விவகாரத்தில் என் மீது புகார் கூறுவதா?- இரா.கண்ணன் ஆதித்தன் விளக்க அறிக்கை

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி விவகாரத்தில் என் மீது புகார் கூறுவதா? என இரா.கண்ணன் ஆதித்தன் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

மாலை முரசு இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல ஊர்களில் நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் என்று கூறிக்கொள்ளும் கரிக்கோல் ராஜின் ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி உள்ளார்கள். அதில் தமிழக அரசு என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகம் உள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டியது என் மீதா? அல்லது நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் என்று கூறிக்கொள்ளும் கரிக்கோல்ராஜ் மீதா?.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் வரலாற்றை மீண்டும் எடுத்துச்சொல்ல வேண்டியுள்ளது.

1921-ல் நாடார் வங்கி என்ற பெயரில் நாடார்களின் நலன்கருதி தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட 1962-ல் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இந்த வங்கியை தூத்துக்குடி, சிவகாசி, விருதுநகர் நாடார்களே நிர்வாகம் செய்து வந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் ஒரு பிரிவைச் சேர்ந்த நாடார்கள் ‘எஸ்ஸார்’ நிறுவனத்திடம் தங்கள் பங்கு களை நல்லவிலைக்கு விற்றுவிடுகிறார்கள். இதனால் 67.29 சதவீத பங்குகள் ‘எஸ்ஸார்’ நிறுவனத்தின் ஆறு கம்பெனிகளிடம் செல்கிறது. 32.71 சதவீதம் மட்டுமே நாடார்களிடம் மிஞ்சுகிறது.

இந்த மாற்றத்தை நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எதிர்த்தார்கள். ஆர்.பி.ஐ.யும் தனது கொள்கைப்படி ‘எஸ்ஸார்’ நிறுவனத்தின் கம்பெனிகளுக்கு பெயர் மாற்றம் செய்ய மறுத்துவிட்டது. இந்த நேரத்தில் ‘எஸ்ஸார்’ நிறுவனம் தனது கம்பெனிகளின் உரிமைகளை ஸ்டெர்லிங் நிறுவனத்திற்கு மாற்றுகின்றது.

மேற்படி 67.29 சதவீத (1,91,455) பங்குகளை மீட்பதற்கு நாடார் மகாஜன வங்கி முதலீட்டாளர்கள் மன்றம் என்று ஒரு அறக்கட்டளை 1997ல் அமைக்கப்படுகிறது. இந்த மன்றத்தில் 30 உறுப்பினர்கள் அறங்காவலராக இருக்கிறார்கள். இதன் நோக்கம் என்னவென்றால் நாடார்களிடம் இருந்து பணம் பெற்று ஸ்டெர்லிங் நிறுவனத்திடம் இருந்த வங்கியின் பங்குகளை திரும்பப்பெற்று பங்குகளை நாடார்கள் வசம் ஒப்படைப்பதே. அந்த மன்றத்தின் தலைவர் எனது தந்தை பா.ராமச்சந்திர ஆதித்தன் ஆவார்.

நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், பொருளாளராகவும் யார் இருக்கிறார்களோ அவர்கள் முதலீட்டாளர்கள் மன்றத்தின் அறங்காவலர்களாக இருப்பார்கள். இந்த வகையில்தான் கரிக்கோல்ராஜ் அறங்காவலர் ஆனார்.

இதற்காக 1,91,455 பங்குகளை ஸ்டெர்லிங் குரூப்பிடம் இருந்து வாங்க ரூ.155 கோடியில் ஒப்பந்தம் ஒன்றை முதலீட்டாளர்கள் மன்றம் 24.6.1999 அன்று கையெழுத்திடுகிறது. ஆனால் ரூ.100.75 கோடி மட்டுமே நாடார்களிடம் திரட்ட முடிகிறது.

அதிலும் ஒரு சிலர் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதால் கடைசியில் ரூ.80.75 கோடி மட்டுமே மிஞ்சுகிறது.

இந்த நேரத்தில் ஒப்பந்த நேரம் முடிகிறது. எனவே ஸ்டெர்லிங் குரூப் வட்டி கேட்கிறது. பிறகு 1,91,455 பங்குகளில் 96,000 பங்குகள் மட்டும் பணம் கொடுத்தவர்கள் பெயரில் மாற்றப்படுகிறது. அதாவது 25 ஆயிரம் நாடார்கள் பெயர்களில் 96 ஆயிரம் பங்குகள் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

இவ்விதம் 96 ஆயிரம் பங்குகளை மாற்றியதற்கு பிறகு, ஸ்டர்லிங் நிறுவனத்திடம் மீதமுள்ள 33.43 சதவீத பங்குகள் இருந்தன. அனைத்து நாடார்களுக்கும் பங்குகள் வாங்க வாய்ப்பு கொடுத்து யாரும் வாங்க முன்வராத நேரத்தில்தான் பா.ராமச்சந்திர ஆதித்தன் வங்கி முதலீட்டாளர்கள் மன்றத்தின் தலைவர் என்ற முறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மூலதனம் செய்வதற்காக மட்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் பங்குகளை விற்க முடிவு செய்தார்.

எனவே, ஆர்.பி.ஐ.யிடம் அனுமதி பெற்று ஸ்டெர்லிங் குழுமத்திடம் மீதமுள்ள பங்குகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 46,862 பங்குகளும், மீதமுள்ள 20,204 பங்குகள் நாடார்களிடமும் விற்கப்படுகின்றன.

இதில் என் தந்தை பா.ராமச்சந்திர ஆதித்தன் வாங்கிய பங்குகள் 10,800 மட்டுமே. இந்த பரிவர்த் தனை அவருக்கும், சிவசங்கரனுக்கும் ஏற்பட்ட ஒன்று. இதில் 3-வது மனிதனான கரிக்கோல்ராஜூக்கு எந்த தொடர்பும் இல்லை. ஏன் இந்த பரிவர்த்தனையில் நாடார் மகாஜன சங்கத்துக்கும் தொடர்பு கிடையாது.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கையில் இருப்பதற்கு முக்கிய காரணம் ஜி.கரிக்கோல்ராஜ்.

கரிக்கோல்ராஜ் நாடார்கள் அல்லாத வெளிநாட்டு முதலீட்டாளர்களால் இயக்கப்படுகிறார் என்பது தான் உண்மை. தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நலன் மீது அக்கறை கிடையாது. அது நாடார்களின் நலனுக்காக இயங்க வேண்டும் என்பதிலும் அக்கறை கிடையாது.

அவர்களுக்கு இன்றுள்ள ஒரே குறிக்கோள் என்னவென்றால் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பொது பங்கு விற்பனைக்கு (ஐ.பி.ஓ.) போக வேண்டும். அதற்கு நான் தடையாக இருக்கிறேன். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பொது பங்கு விற்பனைக்கு போகும் மறுநாளே நாடார்களுக்கு என்று உருவாக்கப்பட்ட வங்கி நாடார்களை விட்டு போய்விடும்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் என்று கூறிக்கொண்டு இருக்கும் கரிக்கோல்ராஜ் இன்று நாடார்களுக்காக ஏதோ காரியத்துக்காக ரூ.10 கோடி திரட்ட வேண்டும் என்றால் அவரால் ஒரு ரூபாய் கூட திரட்ட முடியாது.

அதே சமயத்தில் ரூ.100 கோடிக்குமேல் நாடார் களுக்காக திரட்டி அவர்கள் இழந்த 67 சதவீத டி.எம்.பி. பங்குகளை நாடார்களுக்கு மீண்டும் பெற்றுத்தந்த பெருமை பா.ராமச்சந்திர ஆதித்தனாருக்கே சேரும். தன்னை இந்த அளவு உருவாக்கிய பா.ராமச்சந்திர ஆதித்தனார் மீதும் அவர் குடும்பத்தார் மீதும் கரிக்கோல்ராஜ் பாய்வது வெளிநாட்டு முதலீட்டாளர்களை திருப்திபடுத்தவே.

இப்படிப்பட்ட ஒருவர் நாடார்களுக்காக இருக்கும் சங்கத்தின் பெரிய சங்கமான நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளராக இருக்க வேண்டுமா? என்று நினைத்து பார்க்க வேண்டும்.

தான் டி.எம்.பி. இயக்குனர் தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. மூலதனம் செய்வதற்காக பங்குகள் வாங்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வங்கியை நிர்வாகம் செய்யக்கூடாது என்ற வைராக்கியம் கொண்டிருந்த பா.ராமச்சந்திர ஆதித்தனாரை குறை கூற வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஆதரித்து வரும் கரிக்கோல்ராஜூக்கு எந்த தகுதியும் இல்லை.

கடைசியாக இந்த கரிக்கோல்ராஜ், அவருக்கோ இல்லை அவர் பதவிக்கோ ஆபத்து வந்தால் என் மீது புகார் கூறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார். ஏற்கனவே அவர் கூறிய புகாருக்கு நான் இரண்டு முறை பதில் கொடுத்து விட்டேன். இப்போது ஒருங்கிணைந்த நாடார் சங்கங்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

அதற்கு அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு என் மீது புகார் கூறி தப்பிக்க பார்க்கிறார்.

தமிழ்நாடு அரசு மட்டும் அல்ல. நாடார்கள் அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டியது இந்த ஜி.கரிக்கோல்ராஜ் மீதுதான்.

இவ்வாறு இரா.கண்ணன் ஆதித்தன் கூறியுள்ளார்.