கனிமொழி 
உள்ளூர் செய்திகள்

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து திராவிடர் கழகம் பிரசார பயணம்: கனிமொழி 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் முதல் சென்னை வரை பிரசார பயணம் நடக்கிறது.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் சுப்பிரமணியம் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் முதல் சென்னை வரை பிரசார பயணம் நடக்கிறது.

இந்த பயணம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடக்கிறது. சுமார் 50 பேர் வரை பங்கேற்கிறார்கள். 21 நாட்கள் வரை இந்த பிரசார பயணம் நடக்கிறது. 25-ந் தேதி சென்னையில் முடிவடைகிறது. பயணத்தின் போது 41 பொது கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

இதன் தொடக்க விழா நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவில் தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்று பயணத்தை தொடங்கி வைக்கிறார். அவருக்கு ஒழுகினசேரி சந்திப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் வெற்றி வேந்தன், துணை தலைவர் நல்லபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் தயாளன், பகுத்தறிவு கழக செயலாளர் சிவதாணு, இலக்கிய அணி செயலாளர் பொன்னுராசன் ஆகியோர் உடனிருந்தனர்.