நகை பறிப்பு 
உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே விபத்து ஏற்படுத்தி பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்து சென்ற கொள்ளையர்கள்

ஜோலார்பேட்டை அருகே இரவு நேரத்தில் பெண்கள் மொபட்டில் தனியாக செல்வதை நோட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி பெண்ணிடமிருந்து செயினை பறித்து சென்ற கொள்ளையர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை என்பவரின் மனைவி சசிகலா (வயது42). இவர் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகே மளிகை கடை வைத்துள்ளார்.

இதனால் காலையில் கடை திறந்து வியாபாரம் செய்து விட்டு இரவு 9 மணி அளவில் கடையை மூடிவிட்டு அவரது மகள் மோனிகா உடன் மொபட்டில் செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கடை திறந்து வியாபாரம் செய்துவிட்டு இரவு கடையை மூடிவிட்டு பாச்சல் மேம்பாலம் வழியாக சசிகலாவை மொபட்டில் அழைத்துக்கொண்டு மோனிகா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது சின்ன மூக்கனூர் சர்வீஸ் சாலை பகுதியில் சென்றபோது எதிரே பதிவெண் இல்லாத பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் மோனிகாவின் மொபட் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர்.

பின்னர் சசிகலா, மோனிகா ஆகிய இருவரும் மொபட்டில் இருந்து கீழே விழுந்ததில் சசிகலாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து பைக்கில் வந்த 2 கொள்ளையர்கள் சசிகலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாகினர்.

அப்போது சசிகலா மற்றும் மோனிகா ஆகிய இருவரும் கத்தி கூச்சலிட்டனர்.

பின்னர் படுகாயம் அடைந்த சசிகலாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் இது குறித்து சசிகலா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து 5 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இரவு நேரத்தில் பெண்கள் மொபட்டில் தனியாக செல்வதை நோட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி பெண்ணிடமிருந்து தாலிச் செயினை பறித்து சென்ற கொள்ளையர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.