கொள்ளை 
உள்ளூர் செய்திகள்

மூதாட்டியை கத்தியால் குத்தி நகை-பணம் கொள்ளை

திருப்பூரில் மூதாட்டியை கத்தியால் குத்தி நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் எம்.ஜி.புதூர் 3-வது வீதியை சேர்ந்தவர் நாகமணி (வயது 75). இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் 4 வீடுகள் உள்ளன. இதில் 3 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். தினமும் அவருக்கு உறவினர்கள் உணவு கொடுத்து வந்தனர்.

நேற்றுக்காலை உணவு கொடுப்பதற்காக உறவினர் ஒருவர் சென்றார். கதவை தட்டி நாகமணியை அழைத்த போது உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்த போது நாகமணி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது நாகமணியின் வாயில் துணிகள் திணிக்கப்பட்டு இருந்ததுடன் அவரது கையில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது.

மேலும் அவர் அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் வீட்டில் இருந்த ரூ.5ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். நாகமணி தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட கும்பல் நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்து நாகமணியிடம் கத்தியை காட்டி நகை- பணத்தை தருமாறு மிரட்டியுள்ளனர். ஆனால் அவர் கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த கும்பல் கத்தியால் நாகமணியின் கையில் குத்தியுள்ளனர். இதனால் பயந்து போன நாகமணி தான் அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் வீட்டில் இருந்த ரூ.5ஆயிரம் பணத்தை கொள்ளை கும்பலிடம் எடுத்துகொடுத்துள்ளார். அதனை பறித்து சென்ற கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். கொள்ளையர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர்.