சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பன் நகரை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 73). இவர் மின்வாரியத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மகன் ரஞ்சித்குமார், குஜராத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தில் வசித்து வந்த ஜெயபாலன், தனது மகனை பார்ப்பதற்காக குஜராத் சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர். குஜராத்துக்கு சென்ற ஜெயபாலன் நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனது கண்டு திடுக்கிட்டார்.
இது குறித்து அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.