மல்லிகை பூ 
உள்ளூர் செய்திகள்

தோவாளை மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனை

சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பூச்செடிகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியதால் பூக்கள் வரத்து குறைந்தது. மேலும் பனிப்பொழிவும் தொடங்கி விட்டதால் தோவாளை பூ மார்க்கெட்டுக்கு பூ வரத்து குறைந்துவிட்டது.

மாலை மலர்

ஆரல்வாய்மொழி:

குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு ஆரல்வாய்மொழி, குமாரபுரம், ராதாபுரம் பகுதிகளில் இருந்து பிச்சிப்பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

மதுரை, மானாமதுரை, வத்தலக்குண்டு பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. இதுபோல் பெங்களூரு, ஓசூர் பகுதிகளில் இருந்து மஞ்சள் கேந்தி, தென்காசி, அம்பை பகுதிகளில் இருந்து பச்சைப்பூக்கள், துளசி ஆகியவை கொண்டு வரப்படுகின்றன. தோவாளை சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கேந்தி விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து கேரள மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பூச்செடிகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியதால் பூக்கள் வரத்து குறைந்தது. மேலும் பனிப்பொழிவும் தொடங்கி விட்டதால் தோவாளை பூ மார்க்கெட்டுக்கு பூ வரத்து குறைந்துவிட்டது.

கார்த்திகை மாதம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், சபரிமலை சீசன் மற்றும் திருமணம் நிகழ்ச்சிகளுக்கு பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.

இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3 ஆயிரத்திற்கும், பிச்சிப்பூ ரூ.1750-க்கும் விற்பனையானது. மற்ற பூக்களின் விலையும் அதிகரித்து இருந்தது. இதனால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.