செல்போன் பறிப்பு 
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றவரிடம் மிரட்டி பணம்-செல்போன் பறிப்பு

தஞ்சையில் மோட்டார்சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றவரிடம் பணம் செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 51) வெல்டிங் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தஞ்சை காவேரி நகரில் உள்ள தற்காலிக மார்க்கெட் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி தன்னை ராமநாதன் ரவுண்டானாவில் இறக்கி விடுமாறு லிப்ட் கேட்டுள்ளார்.

இதையடுத்து செந்தில்குமாரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி அவர்கள் புறப்பட்டனர். ஆனால் ராமநாதன் ரவுண்டானா செல்லாமல் விளார் சாலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த செந்தில்குமார் ஏன் வேறு வழியில் செல்கிறீர்கள்? என கேட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவர் திடீரென செந்தில்குமாரை மிரட்டி அவரது பையில் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை சட்டென்று பறித்தார். அதிர்ச்சியடைந்த செந்தில்குமார் உடனடியாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து செந்தில்குமார் தஞ்சை தமிழ்பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 2 பேரையும் தேடி வருகின்றனர்.