திருநங்கை ஆர்த்தி வேட்பு மனு தாக்கல் 
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டில் திருநங்கை ஆர்த்தி வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த திருநங்கை ஆர்த்தி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

சமீப காலமாக திருநங்கைகளுக்கு சமூகத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஏராளமான திருநங்கைகள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் 94 திருநங்கைகள் வாக்காளராக உள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் 55 பேர் வாக்காளராக உள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த திருநங்கை ஆர்த்தி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

பின்னர் அவர் கூறும் போது, தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் திருநங்கைகள் அதிக அளவில் போட்டியிடுகிறார்கள்.

இதில் தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டில் நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். மக்கள் என்னை கவுன்சிலராக தேர்ந்தெடுத்தால், வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.