நெல்லை:
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்தவர் ராஜாபாண்டியன். இவர் இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல தலைவராக உள்ளார். மேலும் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழிலும் செய்து வந்தார்.
பாளை கே.டி.சி.நகர் விஸ்வரத்னா நகரை சேர்ந்தவர் பாலகுமார். இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா(வயது 42). இவர் ராஜாபாண்டியனிடம் ரூ.3 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
மாதந்தோறும் அந்த பணத்திற்கு அவர் வட்டி செலுத்தி வந்த நிலையில் கடந்த மாதம் அவர் வட்டி கொடுக்கவில்லை என்று கூறி கீதா வீட்டுக்கு ராஜா பாண்டியன் சென்றுள்ளார். பின்னர் கீதாவிடம் வட்டியை கேட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் ஆத்திரம் அடைந்து கீதாவை அவதூறாக பேசி, கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கீதா பாளை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராஜாபாண்டியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கந்துவட்டி கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.