விடுமுறை தினமான இன்று பவானி கூடுதுறையில் புனித நீராடிய பக்தர்கள். 
உள்ளூர் செய்திகள்

பவானி கூடுதுறையில் அலைமோதிய கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் காணப்பட்டது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

பவானி:

பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்னால் இரட்டை விநாயகர் படித்துறை பகுதியில் காவிரி பவானி மற்றும் அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் மாதமாகவே கருதப்படுகிறது.

இந்த கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் பலர் மாலை அணிவித்து ஐயப்ப சுவாமிக்கு விரதத்தை தொடங்கி வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், கேரளாவில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலுக்கு செல்லும் வெளிமாநில பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் முன்பு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இதனால், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் காணப்பட்டது. இதனால் பவானி சங்கமேஸ்வரர் கோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.