உள்ளூர் செய்திகள்

சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தற்கொலை

டாக்டரின் மனைவி, தங்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு தனது கணவருக்கு சாம்பார் கொஞ்சம் கொடுங்கள் என்று கூறியுள்ளார். பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் தனது மகனை டாக்டர் சதீஷ்குமார் வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

சத்தியமங்கலம்:

திருப்பூரை சேர்ந்தவர் டாக்டர் சதீஷ்குமார் (32). இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் டாக்டர் சதீஷ்குமார் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு இடமாறுதலாகி வந்தார். பின்னர் இவர் கோணமூலை என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் தங்கி தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் டாக்டர் சதீஷ்குமாரின் மனைவி நேற்று திருப்பூருக்கு சென்று விட்டார். இதையடுத்து டாக்டர் சதீஷ்குமார் மட்டும் வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே டாக்டரின் மனைவி, தங்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு தனது கணவருக்கு சாம்பார் கொஞ்சம் கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் தனது மகனை டாக்டர் சதீஷ்குமார் வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

அப்போது அங்கு சென்று பார்த்த போது கதவு திறந்து கிடந்தது. மேலும் டாக்டர் சதீஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதைபார்த்த சிறுவன் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தான். பின்னர் அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்து இதுகுறித்து திருப்பூருக்கு சென்ற அவரது மனைவிக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இது குறித்து சத்தியமங்கலம் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்தது.

SCROLL FOR NEXT