குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்தவர் ரகமத்அலி. இவரது மகன் முகமது யாசின் (வயது 16). கொசவபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக சாணார்பட்டியில் இருந்து அரசு பஸ்ஸில் ஏறினான். அரசு பஸ்சை திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டி வந்தார். பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் டிரைவர் சங்கர் மாணவர்களை மேலே வரும்படி கூறினார். இருந்த போதும் மாணவர்கள் படியில் நின்றபடி வந்ததால் டிரைவர் தகாத வார்த்தைகளால் திட்டி குச்சியால் தாக்கியுள்ளார்.
இதில் மாணவன் முகமது யாசின் காயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக கொசவபட்டி அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மாணவனின் பெற்றோரும் ஆஸ்பத்திரிக்கு வந்து தங்கள் மகனை பார்த்து கதறி அழுதனர்.
இதனிடையே அரசு பஸ் டிரைவர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் ஒன்றிணைந்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி மற்றும் போலீசார் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கார்த்திக் கூறுகையில், சாணார்பட்டி ஒன்றியத்தில் உட்கடை கிராமங்கள் ஏராளமாக உள்ளது. இங்கு கூலித் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். இந்த பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் கொசவபட்டி மற்றும் திண்டுக்கல்லில் உள்ள பள்ளிகளுக்கு செல்வதற்காக அரசு பஸ்ஸில் பயணம் செய்கின்றனர்.
ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் அரசு பஸ்கள் இல்லாததால் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக படிக்கட்டில் தொங்கி பயணம் செய்கின்றனர். இதனால் அவ்வப்போது படியில் இருந்து தவறி விழுந்து விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே மாணவர்களின் நலன் கருதி இந்த பகுதிகளில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பள்ளி மாணவனை அரசு பஸ் டிரைவர் தாக்கியதால் மாணவர்கள் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.