வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் கீழத்தெருவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் இதர வருமானத்துக்காக ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகின்றனர். இவர்களுடைய ஆடு, மாடுகள் நேற்று வழக்கம்போல் அருகில் உள்ள வாய்க்கால் மற்றும் சாலை ஓரங்களில் மேய்ச்சலுக்காக சென்றன.
மதியம் சுமார் 12 மணி அளவில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் ஒரு பசுமாடு ஆகியவை மர்மமான முறையில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த சந்திரசேகரபுரம் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்துக்கு வந்து ஆடுகளை பரிசோதனை செய்த போது அனைத்து ஆடுகளும் இறந்து விட்டது என தெரியவந்தது.
மேலும் பசுமாட்டுக்கு உயிர் காக்கும் மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்பட்டது. இருப்பினும் பசு மாடு சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது. இதனால் கிராம மக்கள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் ஆடுகள் மற்றும் பசு மாடு உயிரிழப்புக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.