கைது 
உள்ளூர் செய்திகள்

பெண்ணை சிறை வைத்து கத்தியால் குத்திய கஞ்சா கும்பல்- 6 பேர் கைது

பெண்ணை சிறை வைத்து கத்தியால் குத்திய வழக்கில் கஞ்சா கும்பலை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரமேஷ் என்ற குஸ்மி ரமேஷ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

திருவொற்றியூர்:

மணலி ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி. கஞ்சா வியாபாரியான இவர் அந்த பகுதியில் ஆட்களை வைத்து வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் கஞ்சா பொட்டலங்களை கொடுத்து லோகேஸ்வரி விற்பனை செய்ய சொல்லி உள்ளார்.

இதற்கு ரமேசின் அத்தையான (மனைவியின் தாய்) எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆத்திரமடைந்த கஞ்சா கும்பல் மணலி ஜெ.ஜெ. நகர் பகுதியில் வசித்து வந்த 52 வயதான ரமேசின் அத்தையை கடத்தி செல்ல திட்டமிட்டது.

இதன்படி நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று கஞ்சா கும்பல் தூங்கிக் கொண்டிருந்த அவரை தட்டி எழுப்பி ஆட்டோவில் கடத்தி சென்றது.

பின்னர் மணலி சின்ன சேக்காட்டில் உள்ள தங்களுக்கு தெரிந்த அன்பழகன் என்பவரது வீட்டில் அவரை அடைத்து சிறை வைத்தனர்.

பின்னர் கஞ்சா கும்பல் போலீசுக்கு தகவல் சொல்கிறாயா என்று கேட்டு பெண்ணை சித்ரவதை செய்தனர். அவரது ஆடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தியதுடன் கத்தியாலும் குத்தி உள்ளனர்.

வலி தாங்க முடியாமலும், அவமானத்தாலும் கூச்சல் போட்ட பெண்ணை தொடர்ந்து கஞ்சா கும்பல் வீட்டிலேயே அடைத்து வைத்து சித்ரவதை செய்து இருக்கிறது.

பகல் முழுவதும் வீட்டிலேயே சிறை வைத்திருந்த கஞ்சா கும்பலைச் சேர்ந்தவர்கள் மாலை 5.30 மணியளவில் பெண்ணின் தம்பிக்கு போன் செய்து, “உனது அக்கா வெட்டுபட்டு கிடக்கிறாள்” என்று கூறியுள்ளனர். பின்னர் பெண்ணின் தம்பியான கோபி விரைந்து சென்று ஸ்டான்லி மருத்துவமனையில் தனது அக்காவை அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ஆஸ்பத்திரி போலீசார் நடத்திய விசாரணையில் பெண் சிறை வைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

இதையடுத்து மணலி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் மற்றும் போலீசார் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வாக்குமூலமாக அளித்தார்.

அதைவைத்து போலீசார் 2 பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக ரமேஷ் என்ற குஸ்மி ரமேஷ் கைது செய்யப்பட்டார். இவர் பெண்ணை நிர்வாணப்படுத்திய வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ரமேஷ் மீது கோட்டூர்புரம், நீலாங்கரை போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரைச் சேர்ந்த பார்த்திபன் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மாதவரம் பால்பண்ணை, மணலி, மாதவரம், வடக்கு கடற்கரை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

இவர்களுடன் மணலியைச் சேர்ந்த முருகன், திருவொற்றியூர் ஜோதி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், மணலி சின்னசேக்காட்டைச் சேர்ந்த அன்பழகன், மணலியைச் சேர்ந்த சரத்குமார் (ஆட்டோ டிரைவர்) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் கஞ்சா வியாபாரியான லோகேஸ்வரி மற்றும் ரூபி ஆகிய 2 பெண்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மணலி பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் இதுபோன்ற மோதல் சம்பவங்களை தடுக்க முடியும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.