திசையன்விளை:
நெல்லை மாவட்டம் உவரி ராஜா தெருவை சேர்ந்தவர் செல்வன்(வயது 42). இவரது மனைவி சகாயராணி. இவர் கால் வலியால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி காமராஜ் நகர் அறங்கூர் தொட்டியத்தை சேர்ந்த சன்னியாசி அம்மாள்(45) என்பவர் உவரிக்கு கைரேகை பார்ப்பதாக கூறி வந்துள்ளார்.
அவர் சகாயராணியிடம் திருப்பதியில் சித்தர் இருப்பதாகவும், அவரை பார்த்தால் உடல்நிலை சரியாகிவிடும் என்றும் கூறி உள்ளார்.
இதையடுத்து திருச்சியை சேர்ந்த தாமஸ்(30) என்பவரை வரவழைத்து அவரை சித்தர் போல வேடமணிய செய்து சகாயராணியிடம் இருந்து ரூ.22 ஆயிரம் மோசடி செய்துவிட்டு 2 பேரும் தப்பி சென்றுவிட்டனர்.
இதேபோல் உவரி அருகே காரிகோவில் வடக்கு தெருவை சேர்ந்த லிங்கராஜா(55) என்பவர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் இருந்துள்ளார். அவரது பெட்டிக்கடைக்கு, ஏற்கனவே மோசடியில் ஈடுபட்ட சன்னியாசி அம்மாளின் கூட்டாளியான நாகம்மாள் சென்றுள்ளார்.
அவரும் அதேபோல சித்தரை பார்த்தால் சரியாகிவிடும் என்று கூறி அவரது கணவரான படாரியப்பனை சித்தர் வேடத்தில் வரவழைத்து ரூ.6 ஆயிரம் மோசடி செய்து விட்டு தப்பி சென்றுள்ளார்.
இதுதொடர்பான புகார்களின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஏமாற்றி பணம் பறித்த தம்பதியான படாரியப்பன்-நாகம்மாள் மற்றும் சன்னியாசி அம்மாள், அவரது மகன் தாமஸ் ஆகியோரை தேடி வந்தனர்.
அவர்கள் 4 பேரும் உவரி அந்தோணியார் ஆலயத்தில் பக்தர்கள் வேடத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் கிராமங்களுக்கு சென்று நோய் வாய்பட்டவர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை போலீசார் மீட்டனர். பின்னர் 4 பேரையும் ராதாபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தொடர்ந்து படாரியப்பன் மற்றும் தாமஸ் ஆகியோரை நாங்குநேரி சிறையிலும், நாகம்மாள்-சன்னியாசி அம்மாளை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைத்தனர். அந்த கும்பல் யாரையெல்லாம் ஏமாற்றி பணம் பறித்தது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.