முன்னாள் அமைச்சர் தங்கமணி 
உள்ளூர் செய்திகள்

நிலக்கரி கையிருப்பு வைக்காமல் மத்திய அரசு மீது தி.மு.க. பழிபோடுகிறது- முன்னாள் அமைச்சர் தங்கமணி

கோடை காலம் வரும் என தெரிந்தும் நிலக்கரி கையிருப்பு வைக்காமல் மத்திய அரசு மீது பழிபோட்டு தி.மு.க. அரசு தப்பிக்க பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் தங்மணி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

ராசிபுரம்:

கோடை வெயிலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா ராசிபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் நடந்தது.

இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, ஜூஸ் போன்றவற்றை வழங்கினார். இதையடுத்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக மின்வெட்டு இருந்து வருகிறது. மத்திய அரசு நிலக்கரியை குறைவாக வழங்குவதாக தி.மு.க. அரசு தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறது. மத்திய தொகுப்பிலிருந்து எப்போதும் 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் டன் வரை தான் நிலக்கரி கொடுத்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு தேவையான அளவை முழுவதுமாக எப்போதும் கொடுத்தது இல்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் இதை வைத்துதான் மின் வெட்டு இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். தற்போது கோடை காலம் வரும் என தெரிந்தும் நிலக்கரி கையிருப்பு வைக்காமல் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்.

கடந்த 16 ஆண்டுகால ஆட்சியில் மின் துறையில் தவறு நடந்துள்ளதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுவது தவறு. கடந்த 5 ஆண்டுகள் நான்தான் மின்துறை அமைச்சராக இருந்தேன். அதில் அப்படியே தவறு நடந்திருந்தால் அவர்கள் வசம் தான் சி.பி.ஐ. உள்ளது. அதனை வைத்து விசாரணை நடத்தட்டும். நான் தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.